தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு ஆகியவை முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை போன்ற பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன. பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்பே துணை முதல்வர் ஓபிஎஸ், அவர் போட்டியிட இருக்கும் போடி தொகுதியில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் மார்ச் 18ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஓபிஎஸ் ஈடுபட உள்ளார். நாளை மறுநாள் முதல் 21ஆம் தேதி வரை பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள ஓபிஎஸ், 18 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருவொற்றியூர் தேரடியில் இருந்து அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். நான்கு நாட்களில் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.