திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள சேவுகம்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிலருக்கு, அ.தி.மு.க. சார்பில் நிவாரணப் பணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சேவுகம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நிவாரண உதவிகள் வழங்குவதற்காக, டோக்கன் கொடுக்கப்பட்ட 130 பேருக்கு தன் பங்கிற்கு 5 கிலோ அரிசியை அனுப்பி இருந்தார் நிலக்கோட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர். இவரது தலைமையில் நடக்கும் விழாவென்பதால், ஓ.பி.எஸ். ஓ.பி.ஆர். ஆர்மி அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் ஊர்முழுக்க வரவேற்பு போஸ்டர் ஒட்டினார்கள்.
இதைப் பார்த்த பொதுமக்களும், டோக்கன் இல்லாத பெண்களும் நிவாரண உதவிக்காக பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். டோக்கனோடு வந்தவர்களும், டோக்கன் இல்லாதவர்களும் நிவாரணப் பொருட்களை வாங்க முண்டியடித்ததால், தனிமனித இடைவெளி காணாமல் போனது. தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக எடுத்து வைத்திருந்த நிவாரணப் பொருட்களை, அங்கிருந்த தி.மு.க. உ.பி.க்கள் எடுத்துக்கொடுக்க முயன்ற போது, எம்.எல்.ஏ.வின் உதவியாளர் வெங்கடேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியில், காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் பலர் வெறுங்கையோடு கிளம்பினார்கள். இதில் டென்ஷனான எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர், நிலக்கோட்டையில் இருந்து அரிசிப் பைகளை வரவைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிவிட்டுச் சென்றார்.
இதுவரை இல்லாத ஓ.பி.எஸ்., ஓ.பி.ஆர். ஆர்மி என்ற புதிய அமைப்பின் ஆர்வக் கோளாறான முயற்சியால், எம்.எல்.ஏ. தேன்மொழி சேகருக்கு மிஞ்சியதோ தர்மசங்கடம் மட்டும்தான். இக்கட்டான சூழலில் எம்.எல்.ஏ. உதவுவார் என்று நம்பிவந்த மக்களோ, ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.