கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. அதன் பகுதியாக பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதோடு, கரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டென்ஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று விசாரித்த போது, விஜயபாஸ்கருக்கு பதிலாக, அமைச்சர் உதயகுமாரிடம் சுகாதாரத்துறையை ஒப்படைத்து விட்டு, வருவாய்த்துறையை விஜயபாஸ்கரை கவனிக்கச் சொல்லலாம் என்று தீவிரமாக டிஸ்கஸ் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல், புள்ளிவிபரக் குளறுபடி உட்பட, பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருக்கும் சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷையும் மாற்றிவிட்டு, உமாநாத்தை கொண்டு வரலாம் என்றும் ஆலோசித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.