முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கோடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர் என சசிகலா வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்ட விளக்க அறிக்கையில் தகவல் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஜெயா பிரிண்டர்ஸ், நமது எம்ஜிஆர் நிறுவனத்திற்கும் தானே உரிமையாளர் என்று சசிகலா கூறியுள்ளார். மதிப்பிழக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மூலம் ரிசார்ட், ஷாப்பிங் மால், ஆலைகள் உள்ளிட்ட சொத்துகளை வாங்கியதை சசிகலா வருமானத் துறையிடம் முழுமையாக மறுத்துள்ளார் என்று தகவல் கூறுகின்றன.
அதேபோல் கோடநாடு, க்ரீன் டீ எஸ்டேட், ராயல்வேலி, ஃ புளோரிடெக் பங்குதாரராக ஜெயலலிதா உடன் இருந்ததாகவும், ஜெயலலிதா மறைந்த பின் 2016- ஆம் ஆண்டு டிசம்பர் 6- ஆம் தேதி முதல் அந்த நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என வருமான வரித்துறை அறிக்கையில் சசிகலா கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இவ்வளவு சொத்துக்கான வருவாய் எப்படி வந்தது அதற்கான ஆதாரங்கள் என்ன என்று தீவிர விசாரணையில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஒரு சில அரசு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சசிகலாவின் சொத்து விபரங்களைத் திரட்டிய வருமான வரித்துறை, அதிரடி அறிக்கையைத் தயார் செய்தது போல், அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் பற்றியும் சைலண்ட்டாக விசாரித்து, அவர் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துக்கள் பற்றிய அறிக்கையைத் தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் பல்வேறு சுவாரஸ்யமான விபரங்களும் தொகுக்கப்பட்ட்டுள்ளதாக கூறுகின்றனர். தனது துபாய் நண்பர்களுக்கு சொத்துக்களை வாங்குவது போல் அவர்களைக் காட்டித்தான் சொத்துக்களை விஜயபாஸ்கர் வாங்குவார் என்று சொல்லப்படுகிறது.
இப்படி புதுக்கோட்டையில் இருந்து மதுரை வரையில் ஏராளமான சொத்துக்களை வாங்கிப் போட்டிருக்கிறார் அமைச்சர் என்கின்றனர். அவர் குறித்த சகல ஆவணங்களையும் வருமான வரித்துறை தீவிரமாகத் தயார் செய்திருக்கும் நிலையில், அந்த அறிக்கையை முதல்வர் எடப்பாடி தலையிட்டு ’பிரேக்’ பிடித்து வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் எப்போது இந்த வில்லங்கம் அமைச்சருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரியாமல் அமைச்சர் தரப்பு பதட்டத்தில் இருப்பதாக சொல்கின்றனர்.