தமிழகத்தில் அதிமுக - பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால் தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன. இந்த நிலையில், புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களில் அதிமுக - தே.மு.தி.க கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் உள்ளன. எந்த இடத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க. 9 வார்டுகளிலும் பா.ஜ.க 2 வார்டுகளிலும் த.மா.கா. ஒரு வார்டு என கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 3 வார்டுகளில் ஒரு வார்டு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 2 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் ஒரு வார்டில் திமுக போட்டியின்றி தேர்வானது. மற்றொரு வார்டிலும் திமுக வெற்றி பெற வசதி செய்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் அமைச்சரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. அதிமுக வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி உள்ளூர் கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் இருவருக்கும் தாமரை சின்னத்திற்கும் சேர்த்து வாக்கு சேகரித்தார். கையில் தாமரை படம் போட்ட பாஜக தேர்தல் பரப்புரை துண்டறிக்கையை வைத்துக் கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
பாஜகவினரின் அளவில்லாத பேச்சால் தான் கூட்டணியை முறித்துக் கொண்டது அதிமுக தலைமை. ஆனால், மாஜி அமைச்சர் இப்படி பகிரங்கமாக பாஜகவுக்கு ஓட்டுக் கேட்கிறாரே இதனால் அதிமுகவுக்கு பாதிப்பு வராதா? என்ற சலசலப்பு அதிமுகவினரிடம் ஏற்பட்டுள்ளது.