Skip to main content

கூட்டுறவு சங்கத்தேர்தலில் கோல்மால் செய்ய அதிமுக திட்டம் - திமுகவினர் கொந்தளிப்பு

Published on 26/03/2018 | Edited on 26/03/2018
kum


     
 தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கத்துக்கு தேர்தல் நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படவும்  இருக்கிறது. கும்பகோணத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாங்குவதற்கு கூட்டுறவு சங்கத்தின் அலுவலர்கள் மதியம்வரை சங்க கட்டிடத்துக்கு வராததால் ஆத்திரமடைந்த திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

      தஞ்சை மாவட்டம்  கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய பகுதிகளில் முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2 ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கான வேட்புமனுக்கள் வாங்க அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.

 

      கும்பகோணம் துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 16 கூட்டுறவு சங்கங்களுக்கு  வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய அந்தந்த பகுதியில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் காத்திருந்தனர். பட்டீஸ்வரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் என்.ரவிக்குமார் மதியம் 12 மணி வரை சங்க அலுவலகத்துக்கு வராததால் ஆத்திரமடைந்த, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், அங்கிருந்த சங்க செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியனிடம் புகார் மனுகொடுத்தனர். பின்னர் கூட்டுறவு சங்க கட்டிடத்திற்கு வெளியே வந்தவர்கள்,  தமிழக அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 

 

 அவர்களை தொடர்ந்து வந்த திமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலர் வரும் வரை நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து அமர்ந்தனர். உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுகவினர் காலை முதல் சங்க கட்டிடத்தில் காத்திருந்தனர். பிற்பகல் 12.30 மணி வரை வேட்பு மனுவை வாங்க கூடிய அலுவலர் மங்கை, சங்க செயலாளர் ஆர்.மணிசேகரன் வராததால் ஆத்திரமடைந்த திமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்திலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் எஸ். பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டமும் செய்தனர். அதே போல தாராசுரம், மருதாநல்லூர், சோழபுரம், தேவனாஞ்சேரி, கொ.கருப்பூர், களம்பரம் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மதியம் வரை வரவில்லை.  

 

கும்பகோணம் எம்,எல்,ஏ சாக்கோட்டை க. அன்பழகன்,  கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சன்னதிதெருவில் உள்ள துணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.’’  அப்போது துணைப்பதிவாளர் முகாம் சென்றிருப்பதாக கூறிவிட்டனர்.

 

 ’’ கூட்டுறவு சங்கத்தின் தேர்தலில் ஆளுங்கட்சியினர் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் இந்த தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை. வேட்பு மனுக்களை வழங்க காலை முதல் சங்கத்தின் உறுப்பினர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், செயலாளர்கள் ஆகியோர் மதியம் வரை சங்கத்துக்கு வரவில்லை. இதில் ஏதே உள்நோக்கம் உள்ளது. ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நியாயமாக நடத்த தமிழக அரசு முன் வர வேண்டும் ’’என்கிறார் கும்பகோணம் எம்,எல்,ஏ அன்பழகன்.  இதனை தொடர்ந்து 16 சங்கங்கள் முன்பாகவும் பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

     கடந்த முறை  நடந்த தேர்தலில் கூட்டுறவு சங்க தேர்தல் நியாயமான நடைபெற வாய்ப்பு இல்லை என்று அந்த தேர்தலில்  திமுக போட்டியிடாது  என அப்போது திமுக தலைவர்  கலைஞர் அறிவித்தார். அப்போது அதிமுகவினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சியனா அதிமுக, திமுக, அதிமுகவில் இருந்து பிரிந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும்  போட்டியிடுவதால்   கூட்டுறவு சங்கத் தேர்தல் சூடுபிடிக்கவே செய்துள்ளது.

 

இந்த விவகாரம் கும்பகோணம் பகுதிகளில் மட்டுமின்றி நாகை திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் முழுவதுமே எழுந்துள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகளை  ஆளுங்கட்சியான  அதிமுகவின் அமைச்சர்களின் உத்தரவின் பேரில், விடியற்காலையிலேயே வரவழைத்து, அதே இடத்திற்கு போட்டியிடும் அதிமுகவினரையும்  ஒரே இடத்துக்கு ரகசியமாக  வரவழைத்து வேட்பு மனுக்கள் வழங்கியுள்ளனர். கடந்த முறை நடந்த தேர்தல் போலவே நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் அதிமுகவினர். அது ஒருபோதும் நடக்கவிடமாட்டோம், என போராட்டத்தில் குதித்துவிட்டனர். திமுக அ,ம,மு,க உள்ளிட்ட கட்சியினர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

58 கோடி ரூபாய் மோசடி; கூட்டுறவு சங்க நிர்வாகியை காவலில் எடுத்து விசாரணை!

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

58 crore rupees fraud co-operative society executive interrogated

 

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் ஜெயவேல் (67). இவர், தனது உறவினர்கள் தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டு, சேலத்தில் அமுதசுரபி கூட்டுறவு மற்றும் சிக்கன நாணய சங்கம் என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனத்தை தொடங்கினார். இதையடுத்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இந்த சங்கத்தின் கிளைகளைத் தொடங்கினர். இந்த சங்கத்தில், குறுகிய கால வைப்புகளுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என அறிவித்தனர். கவர்ச்சிகரமான அறிவிப்பை பார்த்து நம்பிய ஏராளமான முதலீட்டாளர்கள் அமுதசுரபி கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் முதலீடுகளைக் கொட்டினர். ஆனால் முதிர்வுக் காலம் முடிந்த பிறகும் உறுப்பினர்களுக்கு அசல், வட்டி தொகையைத் தராமல் சங்க நிர்வாகிகள் இழுத்தடித்து வந்துள்ளனர்.  

 

இந்த நிலையில் தான் இதில் முதலீடு செய்து ஏமாந்து போன சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் (52) என்பவர், பொருளாதார  குற்றப் பிரிவில் அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தின் மீது புகாரளித்தார். அதில், தனது 2.92 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். இவரைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், இந்த சங்கத்தின் மீது புகார்களைக் கொடுத்தனர். டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் காவல்துறை நடத்திய விசாரணையில், அமுதசுரபி கூட்டுறவு நிறுவனம் 58 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.     

 

முதலீட்டாளர்கள் நெருக்கடி அளித்ததால் சங்க நிர்வாகிகள் தலைமறைவு ஆகிவிட்டனர். இந்நிலையில், சங்கத்தின் தலைவராக செயல்பட்ட ஜெயவேல், கணக்காளர் கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான தங்கபழத்தை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி கைது செய்தனர். அவரை கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தங்கபழத்தை காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவினர் முடிவு செய்தனர். அதையடுத்து டான்பிட் நீதிமன்றத்தில் தங்கபழத்தை  நான்கு நாள்கள் காவலில் எடுக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.    

 

இதையடுத்து தங்கபழத்தை காவலில் எடுத்த பொருளாதார குற்றப்பிரிவினர், முதலீடாக பெற்ற தொகையை என்ன செய்தனர்? அதன்மூலம் எந்தெந்த இடங்களில் சொத்துகளை வாங்கியுள்ளனர்? தங்கம், கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்துள்ளனரா? எனப் பல்வேறு கோணங்களில்  விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றுடன் (ஜூன் 22, 2023) தங்கபழத்தின் காவல் முடிகிறது. விசாரணை முடிந்த பிறகு அவரை இன்று மாலை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, தலைமறைவாக உள்ள பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோரை தேடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

 

 

Next Story

ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அடுத்தடுத்த திட்டங்கள்..ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

EPS-led AIADMK's next plans

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக் கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ், தங்கமணி, பொன்னையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

அதிமுக தற்போது இரு தரப்பாக இருக்கும் நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 75 மாவட்ட செயலாளர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள 69 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 61 பழனிசாமி சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு தமிழகம் எங்கும் பொதுக்கூட்டம் நடத்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் 17ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

அதிமுகவின் துணை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஓபிஎஸ் மற்றும் துணை கொறடாவாக இருந்த மனோஜ் பாண்டியனையும் நீக்கி புதிய துணை சட்டப்பேரவை தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும் துணை கொறடாவாக  அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு கடிதம் வழங்கி இருந்தது. இது குறித்து சபாநாயகர் முடிவு ஏதும் எடுக்காத நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.