விருதுநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டுள்ளார்.தற்போது தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திரபாலாஜி. இவர் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் அவரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கட்சி பதவியில் இருந்து நீக்கியது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் நீக்கத்துக்கு பல கரணங்கள் அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றனர்.சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியின் போது, சசிகலா சிறையில் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. விரைவில் சசிகலா விடுதலையாகப் பிராத்திக்கிறேன் என்றும், அவர் வெளியே வந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று பரபரப்பாகப் பேசினார். அதிமுக அமைச்சரின் பேச்சு அதிமுக தலைமை, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ராஜேந்திர பாலாஜி இன்னும் சசிகலாவிற்கு விசுவாசியாக உள்ளார் என்ற பேச்சும் அடிபட்டது. மேலும் ரஜினியின் பல கருத்துக்கு ஆதரவாகவும் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்து வந்தார். மேலும் ரஜினியின் மக்கள் மன்றத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும், ஒரு வேளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் ரஜினி கட்சியில் ராஜேந்திர பாலாஜி இணைய முயற்சி செய்யலாம் என்றும் அதிமுக தலைமைக்கு தகவல் போனதும் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக தலைமை, அமைச்சர் மீது அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கின்றனர்.