ஆவின் பால் டேங்கர் லாரி டெண்டர் விவகாரம் குறித்தும், ஆவினில் உபரி பாலை உருமாற்றம் செய்ததில் நடந்துள்ள ஊழல்கள் பற்றியும் துறையின் செயலாளர் கோபால் ஐ.ஏ.எஸ்.சிடம் விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. கடந்த 2018-19ம் ஆண்டில் 37 லட்சம் லிட்டர் பாலை தினசரி கொள்முதல் செய்து வந்திருக்கிறது ஆவின் நிறுவனம். இதில் 14 லட்சம் லிட்டர் பால் தினமும் உபரியானது. அதில் 7 லட்சம் லிட்டர் பாலை தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தனியார் பால் நிறுவனத்திடம் கொடுத்து பால் பவுடராக தினமும் உருமாற்றம் செய்து வந்தனர் ஆவின் அதிகாரிகள்.
மேலும் அப்படி உருமாற்றம் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் சமீபத்தில் சிலர் ஆதாரப்பூர்வமாக விவரித்திருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்த ராஜேந்திரபாலாஜி, ’"ஆவினில் நடக்கும் பல ஊழல்கள் நமக்கு தெரியவே மாட்டேங்கிறது. அதிகாரிகள் செய்ற ஊழல்களுக்கு என் தலைதான் உருளுது' என கோபமாக கமெண்ட் பண்ணியதுடன், இது குறித்து விளக்கமளிக்குமாறு துறையின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். உபரி பால் உருமாற்றத்தில் ஊழல் செய்த பொது மேலாளர்கள் உள்ளிட்ட ஆவின் அதிகாரிகள் சிக்கவிருக்கிறார்கள். விரைவில் இந்த ஊழல் பூதாகரமாக வெடிக்கவிருக்கிறது. இந்த நிலையில், வெளிமாவட்டத்திலிருந்த சில ஆவின் அதிகாரிகளை சென்னை ஆவின் தலைமையகத்துக்கு கொண்டு வந்துள்ளார் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ். இதுவும் ஆவினில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.