Skip to main content

பப்ளிசிட்டிக்கு ஆசைப்பட்ட அமைச்சர்... அமைச்சரைச் சந்தித்தவருக்கு கரோனா... அச்சத்தில் தமிழக அமைச்சர்கள்!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரமே முடங்கிக் கிடக்கிறது. பப்ளிசிட்டிக்கு ஆசைப்பட்ட ஏரியா அமைச்சரின் விபரீத செயல் தான், இதற்குக் காரணம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். என்ன நடந்ததென்று அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, "டெல்லி மாநாட்டில் தொடர்புடைய சிலரின் குடும்பத்தினர் 52 பேர் ஏப்ரல்-03 முதல் தனிமையில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலரை சோதனை செய்தபோது கரோனா தொற்று இல்லை என்று அறிக்கை வந்தது. இதையடுத்து, ஷபேபராத் பண்டிகை வருகிறது. அதனால், அவர்களை மொத்தமாக வீட்டுக்கு அனுப்புங்கள் என்று மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமைச்சர் நிலோபர் கபீல். அமைச்சரே சொல்கிறார் என்று அவரும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் அனுப்பச் சொல்லிவிட்டார். மருத்துவர்களும் வேறு வழியின்றி அரைகுறை மனதோடு அவர்களை வீட்டுக்கு அனுப்பச் சம்மதித்தார்கள்.

 

admk



இதையடுத்து, ஏப்ரல் 09-ந்தேதி பெண்கள் இருந்த மண்டபத்திற்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து, அவர்களைக் கட்டியணைத்து வழியனுப்பினார் அமைச்சர் நிலோபர். பொதுவாக 14 நாட்கள் தனிமையில் இருக்கவேண்டும் எனும்போது, தனிமையில் வைக்கப்பட்டவர்களை ஆறே நாட்களில் வீட்டுக்கு அனுப்பியது தொடர்பாக உயர்மட்ட மருத்துவ அதிகாரிகள் கவனத்திற்குச் சென்றதால், மீண்டும் சோதனைக்கு உத்தரவிட்டார்கள். இப்போது அவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி, சுகாதாரத் துறை அதிகாரிகளை மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறது'' என்கிறார்கள்.

மண்டப நிகழ்வுக்குப் பிறகு, வாணியம்பாடியில் இருந்து ஏப்ரல் 10-ந்தேதி இரவு சென்னை சென்ற அமைச்சர், 11-ந்தேதி மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்நிலையில்தான், தான் வழியனுப்பி வைத்த ஒருவருக்கு 13-ந்தேதி கரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததைக் கேட்ட அதிர்ச்சியில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், அதற்கு முன்பாகவே அவர் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்தின் மூலமாக, மற்ற அமைச்சர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகம் வலுக்கிறது. இதனால், அமைச்சர்களைக் கவனமாக இருக்கச் சொல்லி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
 

http://onelink.to/nknapp


இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சிவன்அருளையும், அமைச்சர் நிலோபர்கபிலையும் தொடர்புகொண்டோம். இருவருமே லைனில் வரவில்லை. அமைச்சரின் ஆதரவாளர்களோ, “சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., விவகாரத்தில் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் அமைச்சர். இதனால், சொந்தச் சமுதாய மக்களிடமே அதிருப்தியை அறுவடை செய்ய வேண்டி இருந்தது. ஏப்ரல் 10-ந்தேதி ஷபேபராத் பண்டிகை வந்தது. அதற்காகவே தனிமையில் வைக்கப்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பினால், அதன்மூலம் இழந்த மதிப்பை மீட்டெடுக்கலாம் என்ற எண்ணத்தில் உத்தரவிட்டார். அதுவே இப்போது சிக்கலாகிவிட்டது'' என்கிறார்கள். நல்லபெயருக்கு ஆசைப்பட்டு அமைச்சர் நிலோபர்கபில் செய்த இந்தச் செயலால், தமிழக அமைச்சர்கள் பலரும் உச்சகட்ட அச்சநிலையில் இருக்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்