பாகிஸ்தானில் கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு மஜக பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாகிஸ்தானில் பெஷாவர் நகருக்கு அருகில் 1919 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கோயிலை அங்குள்ள மதவெறி கும்பல் இடித்து சேதப்படுத்தி உள்ளது. இந்த அராஜகத்தை மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதித்து அவர்களை பாதுகாப்பதே ஜனநாயகத்தின் சிறப்பம்சமாகும். பாகிஸ்தானில் வளர்ந்து வரும் இதுபோன்ற வகுப்புவாத போக்குகளை ஒடுக்குவது அந்த நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
பாகிஸ்தான் அரசு இச்சம்பவத்தை கண்டித்து, இப்பாதக செயலில் ஈடுபட்ட மதவெறியர்களை கைது செய்திருப்பதை வரவேற்கிறோம். அதே சமயம் பாகிஸ்தான் அரசே, அந்த கோயிலை மீண்டும் கட்டிக் கொடுத்து அங்குள்ள சிறுபான்மை இந்து சமுதாய மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை பாழ்படுத்தும் தீய சக்திகள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை வீழ்த்துவது மனித நேயம் உள்ள அனைவரின் கடமை என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக் காட்டுகிறோம்'' என கூறியுள்ளார்.