தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன.
குறிப்பாக, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தே.மு.தி.க., த.மா.கா., புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி எம்.பி. உள்ளிட்டோர் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தினர்.
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் த.மா.கா 8 சட்டமன்றத் தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. தரப்பிடம் கோரியிருந்த நிலையில், 3 முதல் 4 சட்டமன்றத் தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.