தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமாரை ஆதரித்து அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "வெற்றிநடை போடும் தமிழகம் என்றால் ஸ்டாலினுக்கு பயம்; ஏனென்றால் அவர் எதுவும் செய்யவில்லை. ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியதால்தான் வெற்றிநடை போடும் தமிழகம் என்கிறோம். தமிழகத்தில் ரவுடி ராஜ்ஜியம் கிடையாது; அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இருந்தது, சென்னை போன்ற மாநகரில் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா? தமிழ்நாடு மின்மிகை மாநிலம்; தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூபாய் 62,000 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாத சென்னையாக மாற்றுவோம். அ.தி.மு.க. ஆட்சியில்தான் மக்கள் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். நான் எதை நினைத்தாலும் அஞ்சாமல் அதனை சாதிப்பேன். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூபாய் 155 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூபாய் 5,000- லிருந்து ரூபாய் 7,500 ஆக உயர்த்தி தரப்படும். மீனவர்களின் நலன் காக்க மீன்வள கடன் வங்கி தனியாக அமைக்கப்படும்" என்றார்.