அரசியலில் இருந்து விலகி மீண்டும் தனது தொழிலை விரிவுபடுத்துவதில் முனைப்புடன் இருந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சென்னையிலிருந்து விருதுநகருக்கு வந்து திரும்பவும் அரசியல் முகம் காட்டி வருகிறார்.
விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரபாலாஜியைச் சந்தித்துவிட்டு, விருதுநகர் நகராட்சித் தேர்தல் பணியில் தன்னை ஈடுபடுத்திவருகிறார் பாண்டியராஜன். ஆனாலும், அவரது வழிகாட்டுதலை முழுமனதோடு ஏற்பதற்கு விருதுநகர் அதிமுக கவுன்சிலர் வேட்பாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். கடந்த 17-ஆம் தேதி, எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலைபோட பாண்டியராஜன் வந்தபோது, அங்கு மிட்டாய் கொடுத்துக்கொண்டிருந்த அதிமுகவினர் ‘எஸ்கேப்’ ஆனார்கள். ஆனாலும், அண்ணா நினைவுநாளில் அண்ணா சிலைக்கு மாலைபோட்ட பாண்டியராஜன், விருதுநகர் நகராட்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு வெளியேவந்த கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு, சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
மோசடி வழக்கில் சிறை சென்று நிபந்தனை ஜாமினில் ராஜேந்திரபாலாஜி வெளிவந்திருக்கும் நிலையில், விருதுநகரில் கட்சிப் பணிகளை ஆற்றிவரும் மாஃபா பாண்டியராஜனை தொடர்புகொண்டோம், “ஆமா.. முறைப்படி அறிவிப்பெல்லாம் வரல. மேல இருந்து சொல்லிருக்காங்க. விருதுநகர் டவுணை பார்க்கச் சொல்லிருக்காங்க. அப்புறம், சாத்தூர், அருப்புக்கோட்டையிலும் பிரச்சாரம் பண்ண வந்திருக்கேன். இந்த மூணு நகராட்சியவும் நான் பார்க்கிறேன். சிவகாசி மாநகராட்சியை, மற்றதை ராஜேந்திரபாலாஜி பார்த்துக்குவாரு” என்றார்.
மா.செ.வான ராஜேந்திரபாலாஜி மீதுள்ள அச்சத்தால், ‘ஒரு உறையில் இரண்டு கத்திகளா?’ என விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவினர், மாஃபா பாண்டியராஜனை அழையாத விருந்தாளியாகப் பார்ப்பதோடு, “மாஃபா வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவரான பாண்டியராஜன், சியெல் வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் மற்றும் சியெல் ஐடி சொல்யூஷன் ஆகிய நிறுவனங்களையும் நடத்திவருகிறார். அவருடைய தொழிலில் இன்னொரு கிளையை விருதுநகரில் தொடங்கியிருக்கிறார். லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு, கோடிகளில் வருமானம் என்ற திட்டத்தோடு செயல்படும் அவருடைய அரசியல் இலக்கு, விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆவதுதான். அவரைப் பொறுத்தமட்டிலும் வணிகமும் அரசியலும் வேறல்ல” என்று முணுமுணுக்கின்றனர்.
ஓட்டுக்கு பணம் என்று முதலீடு செய்து, அரசியலை வியாபாரம் ஆக்கியதால்தானே, பெரும்பாலான அரசியல்வாதிகள் வளமாக இருக்கின்றனர்.