தமிழகத்தை கொள்ளை அடித்தார்கள், சூறையாடினார்கள். அதிமுக ஆட்சியில் நாம் கண்ட பலன் இதுதான் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில்,''கரிகாலச் சோழன், ராஜேந்திர சோழன், ராஜராஜ சோழன், கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் இப்படியாக தமிழகத்தில் தோன்றிய பல்வேறு அறிஞர்களால் தமிழும் வாழ்ந்தது, தமிழகமும் புகழ்பெற்றது. தமிழர்களுடைய புகழ் இன்று உலகம் முழுமைக்கும் கொடிகட்டி பறக்கிறது என்று சொன்னால் இவர்களெல்லாம் எல்லாம் ஒரு காரணம்.
ஆனால் சென்ற முறை தமிழகத்தின் ஆளுநராக இருந்த புரோகித் இன்று பஞ்சாபில் சொல்லியிருக்கிறார். நான் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பொழுது மிகுந்த அவமானத்திற்குட்பட்டேன். துணைவேந்தர் பதவிகள் 50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அதை சீர்திருத்த நான் மிகவும் சிரமப்பட்டேன் என்று தமிழகத்தின் பெருமையை அவர் பஞ்சாபில் பறைசாற்றி இருக்கிறார். அதிமுக ஆட்சியில் நாம் கண்ட பலன் இதுதான். எதற்காக இந்த ஆட்சி நாம் அகற்றப்பட வேண்டும் என்று சொன்னோம் என்றால் அவர்கள் இவ்வாறெல்லாம் நடந்தது கொண்டதுதான். தமிழகத்தை கொள்ளை அடித்தார்கள், சூறையாடினார்கள், பாதுகாப்பிற்காக மோடி உடன் சேர்ந்து கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். அதே ஆளுநர் வேறொன்றும் சொல்லியிருக்கிறார் தமிழகத்தை பார்த்து எப்படி ஆள வேண்டும் என்பதை பஞ்சாப் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசிற்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஒரு சான்றிதழ் வழங்கியிருக்கிறார். இது நமக்கு கிடைத்திருக்கும் பெருமை'' என்றார்.