தமிழகத் தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நொடிக்கொரு ப்ரேக்கிங் நியூஸ் வந்துகொண்டே இருக்கிறது. ஆளும் கட்சி ஆட்சியைத் தக்க வைக்க முயற்சிக்கிறது. ஆண்ட கட்சியோ, ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறது. சீமான், கமல், தினகரன் உள்ளிட்டோர் ஆட்சியைப் பிடிப்பதற்கான உக்திகளை வகுத்து வருகின்றனர். ஆளும் கட்சியான அதிமுக, முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவுசெய்து, வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், கடந்த 05- ஆம் தேதி அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 6 வேட்பாளர்களின் பெயரும் அவர்கள் போட்டியிடும் தொகுதியும் வெளியானது. போடிநாயக்கனுர் - ஓபிஎஸ், எடப்பாடி - பழனிசாமி, விழுப்புரம் - சி.வி.சண்முகம், ராயபுரம் - ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை - தேன்மொழி. அதற்கு, கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், இன்று இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது, கட்சியினர் மத்தியில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், செம்மலை, அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஆகியோருக்கு தற்போதைய பட்டியலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், நிலோஃபர் கபில், பாஸ்கரன், வளர்மதி ஆகிய 3 அமைச்சர்களுக்கும் சில எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோருக்கு சட்டசபையில் போட்டியிவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளது. 'எடப்பாடி இன்னும் பழைய பகையை மறக்கவில்லை' என்கின்றனர் பெயர் சொல்ல விரும்பாத அதிமுகவினர் சிலர். இதனால், அதிமுகவில் புகைச்சல் கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் சிலர், டிடிவி தினகரனை சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.