தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ராம பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளரை மாற்றி ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். கூட்டாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி, 06/04/2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில், கடலூர் மத்திய மாவட்டம், குறிஞ்சிப்பாடிக்கு சட்டமன்றத் தொகுதிக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக செல்வி இராமஜெயம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், "அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி, 06/04/2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜான்தங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.