Skip to main content

கோவையில் அவர்கள் கால் பதிக்க முடியாது... -எம்.எல்.ஏ நா.கார்த்திக் அதிரடி

Published on 26/01/2019 | Edited on 26/01/2019
dmk mla n.karthik



கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்எல்ஏ நா.கார்த்திக் நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். 
 

கோவையில் திமுக சுத்தமாக இல்லை. கொங்கு மண்டலம் முழுவதும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று அதிமுக கூறுகிறதே? 
 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்தது. அப்படியிருந்தும் கிணத்துக்கடவு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. என்னுடைய சிங்காநல்லூர் தொகுதியிலும் அதிமுக சார்பில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டது. அதையும் மீறி ஐந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். 
 

கொங்கு மண்டலத்தில் திமுக வலிமையாக உள்ளது. மாற்றுக் கருத்து சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு கொங்கு மண்டலத்தில் திமுகவுக்குதான் ஆதரவு இருக்கிறது என்று தேர்தல் முடிவுகள் சொல்லும். 
 

இறங்கி வேலை செய்கிறோம். மக்கள் பிரச்சனைகள் தீர்க்கிறோம். ஓட்டு போடும்போது அவர்கள் எங்களைத்தான் நினைப்பார்கள் என்கிறார்களே அதிமுக எம்எல்ஏக்கள்? 
 

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் இருக்கிறது. அதில் சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் வருகிறது. அதைத் தவிர தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் தொகுதிகளில் பாதி வருகிறது. ஏழத்தாழ ஆறு தொகுதிகள் கோவை மாநகராட்சியில் உள்ளது. 
 

கோவை மாநகராட்சி முழக்க சாலை பிரச்சனை, குப்பைகள் எடுப்பதில்லை, சாக்கடைகளை சுத்தம் செய்வதில்லை, எந்தவித கட்டுமானப்பணிகளும் நடக்கவில்லை. கோவையில் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் ஜி.எஸ்.டி.யால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை அதிமுக எம்.பி. தொகுதிப் பக்கமும் வருவதில்லை. பாராளுமன்றத்தில் தொகுதி மக்களுக்காக குரலும் கொடுப்பதில்லை. 
 

குடிநீருக்கு ரூபாய் 4 ஆயிரம் டெபாசிட் கட்ட வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்தது. அதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தோழமைக் கட்சிகளுடன் இணைந்து திமுக தொடர் போராட்டம் நடத்தியது. முழுக்க முழுக்க நாங்கள் பொதுமக்கள் பிரச்சனைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். கோவை மக்கள் பிரச்சனைகளுக்காக வரலாறு காணாத வகையில் போராட்டம் நடத்தியிருக்கிறோம். கோவையில் மக்கள் பிரச்சனைக்காக வாரத்திற்கு இரண்டு நாள் மாநகராட்சி ஆணையரை சந்திக்கும் சட்டமன்ற உறுப்பினர் நானாகத்தான் இருப்பேன். ஆகையால் திமுக தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் கோவையில் திமுக வெற்றி உறுதி. 
 

பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி என்கிற பேச்சு நிலவுகிறது. அதிலும் கோவையை பாஜக குறி வைத்துள்ளதாமே?
 

மோடி வந்தால் நிறைய மாற்றங்கள் வரும் என்று தொழில் நடத்துபவர்கள் நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை இப்போது தொழில் நடத்துபவர்கள், பொதுமக்கள் இழந்து விட்டனர். இந்த நான்கரை ஆண்டு கால பாஜக ஆட்சி கோவை நகரத்துக்கு சொல்லும்படியாக எந்த திட்டத்தையும் தரவில்லை. தொழில்துறை செழிப்படையும் அளவிற்கு எந்த ஆதரவையும் அவர்கள் செய்யவில்லை. பாஜகவை நிராகரிக்க கோவையில் எல்லா தரப்பு மக்களும் தயாராக இருக்கிறார்கள். அதேபோல் அதிமுக அரசை கேலிக்கூத்தாக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாஜக, அதிமுக மீது கோவை மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் இணைந்தாலும் இவர்களை வீழ்த்துதற்கு திமுக வலிமையோடு உள்ளது. கோவையில் பாஜக கால் பதிக்க முடியாது. அதற்கு தேர்தல் முடிவு சாட்சியாக இருக்கும். 
 

கோவை திமுகவில் கோஷ்டி பூசல்கள் அதிகமாக இருப்பதாகப் பேச்சு நிலவுகிறதே?
 

நாங்கள் எல்லோரும் தலைவர் அணிதான். அணிகளாக பிரிந்து செயல்படும்படியான நிலை மாவட்டத்தில் எங்கும் இல்லை. 
 

 

 

சார்ந்த செய்திகள்