சேலம் – சென்னை இடையிலான எட்டுவழிச்சாலையை, விவசாயிகள், பொதுமக்கள் எதிர்த்து வருகின்றனர். அதிமுக அரசாங்கமும், மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசாங்கமும் சாலையை அமைத்தே தீருவது என்கிற முடிவில் பணியாற்றி வருகின்றனர். இந்த சாலை அமைவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 17ந்தேதி மாலை திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் கலந்துக்கொண்டு உரையாற்றினர்.
திருமாவளவன் பேசும்போது, யாருக்காக இந்த எட்டுவழிச்சாலை?, 5 மாவட்ட மக்கள் யாரும் எட்டுவழிச்சாலை கேட்கவில்லை. மக்கள் கேட்காத போது இந்த சாலை போடப்படுவது கார்ப்பரேட்க்காக. இது கார்ப்பரேட் சாலை. இந்த சாலையில் ஒரு கி.மீக்கு ஒரு டோல்கேட் வரும் அளவுக்கு இதனை தனியார் பராமரிக்கப்போகிறார்கள். சென்னை டூ மதுரையோ, சென்னை டூ கன்னியாகுமரியோக்கோ இவ்வளவு பெரிய சாலை அமைக்காமல் சேலத்துக்கு அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன ?.
இது முழுக்க முழுக்க ஜிண்டால் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் சேலம் முதல் திருவண்ணாமலை வரையுள்ள மலைகளில் உள்ள கனிமவளங்களை வெட்டி எடுத்துச்செல்லவே இந்த சாலை போடப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 20 சதவிதம் கமிஷன் என்றாலும் 3 ஆயிரம் கோடி வரை முதல்வர் எடப்பாடி குடும்பம் கொள்ளையடிக்கவுள்ளது. இங்கு வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை கப்பல் வழியாக ஏற்றுதி செய்ய எண்ணூர் துறைமுகத்தை 50 ஆயிரம் கோடியில் மேம்படுத்தும் வேலைகள் நடைபெறவுள்ளன. கடலுக்கு அடியிலும் துறைமுகப்பணிகள் நடைபெறுகின்றன.
இந்த சாலை போடுவதற்கு பதில் கிராமப்புறங்களை மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளோடு இணையுங்கள். நாட்டில் கிராமங்கள் சாலை வசதி கூட இல்லாமல் உள்ளன. ஆயிரக்கணக்கான கிராமங்கள் சுடுகாட்டுப்பாதையில்லாமல் உள்ளன. அதை செய்யாத அரசு, மக்கள் கேட்காத இந்த சாலையை போடுகிறது.
இந்த சாலையை விடுதலை சிறுத்தைகள் ஏன் எதிர்க்கிறது எனக்கேட்கலாம். எங்கள் மக்களிடம் நிலங்களில்லை. ஆனால் நாங்கள் நிலம் வைத்திருப்பவர்களிடம் வேலை செய்கிறோம். நிலங்கள் இருந்தால் தானே வேலை செய்ய முடியும், எங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியும். நிலமே இல்லாதபோது எங்களுக்கு எப்படி வேலை வழங்குவார்கள். அதனால் தான் எதிர்த்து போராடுகிறோம். இதன் மூலம் நாங்கள் எங்கள் மக்களுக்காக மட்டும் போராடவில்லை. நிலங்களை இழக்கும் பிற சாதி மக்களுக்காகவும் போராடுகிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துக்கொண்டனர். கணிசமான அளவில் பெண்களும் பங்கேற்றனர்.