அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவை, கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி அதிமுகவின் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அன்றைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான இ.பி.எஸ் ஆகியோர் கூட்டாக நீக்கினர். இதற்குக் காரணமாக அன்வர் ராஜா, கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிரான வகையில் செயல்பட்டதால் நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியிலிருந்து விலக்கியதால் தன்னுடைய ஆதங்கத்தை போஸ்டர் மூலமாக வெளிப்படுத்தினார். அதில் அவர், ‘தலைவா! கட்சியிலிருந்து என்னால் விலகியிருக்க முடியவில்லை, ஏனெனில் நான் தினமும் உன்னை நினைக்கிறேன், அதில் நான் என்னை மறக்கின்றேன்...’ எனும் வாசகங்களை இடம்பெறச் செய்திருந்தார்.
இந்நிலையில், வரும் 24ல் எம்.ஜி.ஆரின் 35ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் முழுவதும் அன்வர் ராஜா ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. அதில், ‘தலைவா! ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி. சிதறிக்கிடக்கின்றது. நாங்கள் பதறித்துடிக்கின்றோம் காப்பாற்றுங்கள்..’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.