நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பு சொன்னாலும் சரி கழகத் தொண்டர்கள் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை மாற்ற முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''அம்மா திருமண உதவி திட்டத்தில் ஒரு பவுன் தங்கம், 50 ஆயிரம் ரூபாய் பணம், 12ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், ஒரு பவுன் தங்கம் கொடுத்தார்கள். மூணு வருஷம் படிக்கின்ற அந்த மாணவிகள் இடையிலேயே படிக்க முடியாமல் போய்விடுகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக அப்படிப்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பது தெரியவில்லை. இந்த அரசாங்கம் வந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் விரைவில் ஜிப்மர் மருத்துவமனை பணி தொடங்கும் என்று சொல்லி இருக்கிறார். அதனை எந்த அரசு கொண்டு வந்தாலும் சரி அந்த அரசாங்கம் முன்பு இருந்த அரசை பார்க்காமல் செயல்படுவது வழக்கமான ஒன்று.
கட்சி எடப்பாடி தலைமையில் இருக்கிறது. அமரர் தியாகி மூக்கையா தேவருடைய 43வது நினைவு தினத்தையொட்டி அரசரடியில் மாலை அணிவித்தோம். உசிலம்பட்டியில் அந்த நினைவிடத்திற்கு சென்ற பொழுது மக்கள், தொண்டர்கள் திரளாக கூடினர். ஆயிரக்கணக்கான பேர் திரண்டனர். ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் அணி திரண்டு வந்தார்கள். இதிலிருந்தே கட்சி எங்கே இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பு சொன்னாலும் சரி கழகத் தொண்டர்கள் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை மாற்ற முடியாது. ஒரு கட்சியினுடைய முடிவை நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்லி இப்படித்தான் இருக்கணும் என்று சொன்னால் எந்த அளவிற்கு நிலைக்கும் என்று தெரியவில்லை. எதிர்காலத்தில் எப்படி ஆகும் என்றும் தெரியவில்லை'' என்றார்.