ஜூலை 18ஆம் தேதி தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 3 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 3 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் என்.சந்திரகேகரன் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று இடங்களில் கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒருஇடம் ஒதுக்கப்பட, இரண்டு சீட்கள் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு இடத்திற்கான வேட்பாளர்களை அதிமுக தற்போது அறிவித்துள்ளது.அதிமுக தலைமையின் இந்த அறிவிப்பால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கட்சியில் இருக்கும் சீனியர்களான கே.பி.முனுசாமி, மைத்ரேயன், தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா என பலரும் அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்பட்டது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கும், எடப்பாடி ஆதரவாளர் ஒருவருக்கும் சீட் கொடுக்கபடலாம் என்று அதிமுக வட்டாரங்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத விதமாக இரண்டு வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவித்தது. இதனால் கட்சியின் சீனியர்கள் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகிய மூவரில் ஒருவருக்கு கூட சீட் வழங்காதது மூவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்கின்றனர் நெருங்கிய வட்டாரங்கள்.
இது பற்றி விசாரித்த போது, கட்சியில் இருக்கும் சீனியர்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் கூறி வந்தனர். இதில் ஒருவருக்கு கொடுத்து இன்னொருவருக்கு கொடுக்காமல் விட்டால் கட்சியில் இன்னும் உட்கட்சி பூசல் அதிகமாகும் என்பதாலேயே யாரும் எதிர்பார்க்காத விதமாக முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் என்.சந்திரகேகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளை பெறவும், கொங்கு மண்டலத்தில் இழந்த வாக்குகளை பெறவும் இந்த இரண்டு பேருக்கு சீட் கொடுக்கப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருது தெரிவித்துள்ளனர்.