பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் ஈரோட்டில் வேகம் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் அறிவிப்புக்குப் பிறகு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் ஈரோட்டில் அமலுக்கு வந்தது. அதன்படி அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள தலைவர்களின் சிலைகள் ஆகியவை மறைக்கப்பட்டதோடு, வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடமும் அதீத வேகம் உருவாகியுள்ளது.
திமுக கூட்டணியில், ஈரோடு கிழக்கு காங்கிரஸின் சிட்டிங் சீட் என்ற அளவுகோலில் இங்கு மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அழகிரி கூறியிருந்தாலும், திமுக தரப்பில் இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. அதேசமயம், காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் என்றால் அது ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக இளங்கோவனே போட்டியிட விருப்பம் இருந்தால், காங்கிரசுக்கு கொடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து பேச்சுவார்த்தைகள் எழாத நிலையில், திமுக நேரடியாகப் போட்டியிடவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் ஏற்கனவே எம்.பி.யாக; மத்திய அமைச்சராக; கட்சியின் தமிழகத் தலைவராக இருந்து தேசிய அளவில் தலைவர்களில் ஒருவராக இருக்கும் இச்சூழலில், காங்கிரஸில் வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும் சூழலும் இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், 2024 இல் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியை அவர் விரும்புகிறார் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு சீட் என்ற அடிப்படையில் அக்கட்சி விரும்பிய ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால், அப்போது ஈரோடு தொகுதியை எதிர்பார்த்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனியில் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. ஆனாலும், தனது மகன் நின்று வெற்றிபெற்ற தொகுதியில் மீண்டும் அவரோ அல்லது அவரது குடும்பத்தைச் சார்ந்தவரோ போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என்ற பிளவுகள் இருந்தாலும் மேற்கு மண்டலத்தில் எடப்பாடி கைதான் ஓங்கி இருக்கிறது. அந்த அடிப்படையில் அதிமுகவில் நேரடியாக வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். ஏற்கனவே இங்கு கூட்டணி அமைத்து போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரான ஜி.கே.வாசனை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய குழு இன்று (19 ஆம் தேதி) காலை அவரது சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது இடைத்தேர்தல் செலவு ஏறக்குறைய 20 'சி' யை தாண்டும் என்பதை மனதில் வைத்து வேட்பாளரை அறிவிக்க வேண்டி உள்ளது. அப்படி செலவு செய்ய தமிழ் மாநில காங்கிரஸ் தயாராக இருக்கிறதா என்ற கருத்துக்கள் அவர்கள் பேச்சில் இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஜி.கே.வாசனும் அதிமுகவே போட்டியிட இசைவு காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
ஒருவேளை அதிமுக போட்டியிட்டால் எடப்பாடி பழனிச்சாமி, ஈரோடு அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை களமிறக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என நேரடிப்போட்டி ஈரோட்டில் உருவாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.