தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் மாநில மற்றும் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பிஸியாக உள்ளனர்.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க., பா.ஜ.க., புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், த.மா.கா.வுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். அதன்படி, திரு.வி.க. நகர் (தனி), ஈரோடு (கிழக்கு), லால்குடி, பட்டுக்கோட்டை, கிள்ளியூர், தூத்துக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிடுவர். த.மா.கா.வின் 'சைக்கிள்' சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுகிறோம். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் த.மா.கா. கட்சியினர் அ.தி.மு.க. கூட்டணியின் மகத்தான வெற்றிக்குப் பாடுபடுவர். தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும்" என்றார்.