அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற குழப்பத்தில் கட்சி இருந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வரும் வருகின்றனர். இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சரும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அதிமுக போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசிய போது, " அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் இணைய வேண்டும் என்பதே ஓ. பன்னீர்செல்வத்தின் விருப்பம், அதுவே கட்சி தொண்டர்களின் விருப்பம். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அதிமுக போட்டியிடும். தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு பாஜக தான் தலைமை தாங்கும். அதிமுக அதிக இடங்களில் வெற்றியைப் பெறுவதுடன், எங்கள் கூட்டணி நாற்பது இடங்களிலும் வெற்றி பெறும்.
அதிமுக விவகாரங்களில் பாஜக தலையிடுவதாகத் தெரியவில்லை. தேர்தலின் போது எடப்பாடி பழனிச்சாமி தனித்து இயங்கினால் அவரை ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். எம்.ஜி.ஆர். எதற்காகக் கட்சி ஆரம்பித்தாரோ அதன் படி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்கள் மற்றும் அதிமுகவின் விருப்பம்" என்றும் தெரிவித்தார்.