அண்மையில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்த பொங்கல் தொகுப்பு அறிவிப்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் கரும்பு சேர்க்கப்படாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அதேபோல், அரசியல் கட்சிகள் சார்பிலும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு கரும்புடன் பச்சை அரிசி, சர்க்கரை உடன் 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ''எடப்பாடி பழனிசாமி வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது. இந்தத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து முதன்முதலாக உரிமைக்குரல் எழுப்பி, மக்களுக்கு கரும்பை வழங்குவதோடு அரசை நம்பி செங்கரும்பை விதைத்திருந்த விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அரசே கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும். ஐயாயிரம் ரூபாயாக பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்.
விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்துகின்ற போது அவர்களுக்கு ஆதரவாக; விவசாயிகளுக்குப் பாதுகாவலராக; அவர்களின் குரலாக ஒலித்து தொடர்ந்து குரல் கொடுத்ததன் விளைவாக நேற்றைய தினம் முதல்வர் பொங்கல் பரிசுத் தொகுப்போடு கரும்பும் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது எடப்பாடி பழனிசாமி ஆற்றிய மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். விவசாயிகளும் பொதுமக்களும் அதிமுகவினரும் இன்று மன மகிழ்ச்சியோடு எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கின்ற காட்சி நம் உள்ளத்தை நெகிழச் செய்கிறது'' என்றார்.