கடந்த 7ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரஜினியின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி, முருகதாஸ், அனிருத், யோகி பாபு, விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், அரசியலில் ஒரு சிலர் நாகரீகமே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் ரஜினி சாரிடம் பதவிக் கேட்கவில்லை, இந்த மேடைக்குப் பேச்சுக்குப் பிறகு ரஜினி சார் என்னிடம் பேசாமல் இருந்தால் கூட கவலையில்லை. அரசியல் தலைவர்கள் பலரும் நாகரீகமாகப் பேசுகிறார்கள். ஒரு தலைவர் மட்டும் தான் அநாகரீகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் தான் இந்த நாட்டுக்கே கேடு எனச் சொல்வேன். அரசியலிலேயே அது தவறான விஷயம். அது பெரிய ஆபத்து.
ரஜினி சாரைப் பேசி அதன் மூலம் வரும் விளம்பரத்தால் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். என் தலைவரின் மேடையில் யாரையும் திட்டிப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. இங்குச் சிலர், அரசியலுக்கு யார் வந்தாலும் தவறாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் ரஜினி சாரை பற்றி யாராவது தவறாகப் பேசினால், நான் திரும்பப் பேசுவேன். அரசியலை அரசியலாகப் பேசுங்கள். இங்கு என்னோட உணர்ச்சியை அடக்க முடியாமல் பேசிவிட்டேன். எனக்கு அரசியல் ஒன்றுமே தெரியாது. அரசியலில் நான் ஜீரோ. தயவுசெய்து மறுபடியும் என்னைச் சீண்டி கற்றுக் கொள்ள வைத்துவிடாதீர்கள்” என்று பேசினார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ராகவா லாரன்ஸ், தாம் மட்டுமே தமிழ்த் தாயின் மூத்த பிள்ளை என பேசுகிறார்? அப்படி என்றால் நாங்கள் என்ன அமெரிக்க தாயின் பிள்ளைகளா? நாங்களும் தமிழ்த் தாயின் பிள்ளைகள்தான் என்றார். விமர்சிப்பவர்களை பெயர் சொன்னால் தான் ஆம்பளைன்னு சொல்லுவாங்க. அவங்க பெயர் சொல்லி தான் நான் ஆம்பளை என நிருபிக்க வேண்டுமா..? உங்களை விட நான் நன்றாக பேசுவேன். நான் இராயபுரத்தில் பிறந்தவன் என்ன வேண்டுமானாலும் பேச முடியும். என்றார் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து பேசிய லாரன்ஸ் அந்த அரசியவாதி பெயரைக் குறிப்பிட முயற்சி செய்தார். அப்போது ரஜினி ரசிகர்கள் அவருடைய பெயரை உச்சரிக்க வேண்டாம் என்று கூச்சலிட்டனர். பின்பு ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்று அந்த அரசியவாதியின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார்.