Skip to main content

“கொள்கை அரசியலில் திருமாவளவனுடன் தொடர்ந்து பயணிப்பேன்” - ஆதவ் அர்ஜுனா

Published on 16/12/2024 | Edited on 16/12/2024
 Aadhav Arjuna says he will continue to travel with Thirumavalavan in politics

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதி (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனையடுத்துஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறு மாதம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இருந்த போதிலும் பல்வேறு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து வந்த ஆதவ் அர்ஜுனா நேற்று (15-12-24) விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று (16-12-24) ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், விஜய்யின் த.வெ.க கட்சியில் இணையவுள்ளதாக வந்த தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, “திருமாவளவனிடம் இருந்து கள அரசியல் குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் எப்போதுமே எனக்கு ஆசான். கொள்கை சார்ந்த அரசியலில் அவருடன் தொடர்ந்து பயணிப்பேன். சாம்ஸ்சங் தொழிலாளர்களுக்காக போராடினால் உங்களை நக்ஸ்லைட்ஸ் என்று சொல்வார்கள், மழை வெள்ளத்தில் மக்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்று சொன்னால் சங்கி என்று சொல்வார்கள். 

பிரச்சார களத்தில் இருந்து ஒரு முழு நேர அரசியவாதியாக வரும் போது என் மீது ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு கண்டிப்பாக என்னுடைய பயணத்தில் தான் பதிலளிப்பேன். பெரியார் மீதும், அம்பேத்கர் மீதும் பல சந்தேகங்கள் எழுப்பிய போது, அவர்களுடைய வாழ்க்கை பயணத்தில் அதற்கான பதிலை அளித்தார்கள்” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்