நேற்று (08.03.2023) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியபோது, "வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பி திமுக ஆட்சியை அகற்ற சதி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது முற்றிலும் உண்மை. மக்களிடம் வாக்குகளைப் பெற முடியாத பாஜகவினர் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். பாஜகவினர் அதிமுகவிற்கு செல்வதும், அதிமுகவினர் பாஜகவிற்கு செல்வதும் இரு கட்சிகளும் பேரழிவை சந்திக்கிறது என்பதை காட்டுகிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் மா.பா. பாண்டியராஜன் எதற்காக தவறான கருத்துக்களைத் தெரிவித்தார் என்று தெரியவில்லை. வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. சீமான், அண்ணாமலை போன்றோரின் தவறான கருத்துகளுக்கு தமிழக மக்கள் பலியாக மாட்டார்கள். வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று திமுகவினர் பேசி இருக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜனுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த தொகுதியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதற்கு உரிமை இருக்கிறது. கட்சி மேலிடம் ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிறகு எல்லோரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். பதவியில் உள்ள ஒரு சிலர் தேர்தல் பணிக்கு வரவில்லை. அவ்வாறு தேர்தல் பணிக்கு வராமல் இருந்ததால் 10 வாக்குகள் அதிகமாகக் கிடைத்து இருக்கிறது. சத்தியமூர்த்தி பவனில் மக்கள் ராஜன் வயிற்று வலி அதிகமாக இருந்த காரணத்தால் அழுததாகக் கூறினார்கள். அவர் விரைவில் குணமடைய விரும்புகிறேன். மேலும் அவருக்காக மருத்துவமனையில் பரிசோதனை செய்ய பரிந்துரை கடிதம் கொடுக்கிறேன். நடிகர்களுக்கு கிளிசரின் போட்டால்தான் அழுகை வருகிறது. ஆனால், ஒரு சிலருக்கோ கிளிசரின் போடாமலேயே அழுகை வருகிறது" என்று பேசினார்.