"அங்க இருக்கிறது மூணு பொட்டப்புள்ளைகதானே..? இத்தோட நிறுத்திக்கச் சொல்.! வழக்கை விட்டு வெளியேறச் சொல். சாட்சிக்கெல்லாம் வரவேண்டாம். இல்லைன்னா..! அவங்க அண்ணனுக்கும், அப்பனுக்கும் வந்த நிலைமைதான் இவங்களுக்கும்'' என உயிருக்கும், உடைமைக்குமான அச்சுறுத்தலில் நீதியை மட்டும் நம்பி காத்திருக்கின்றனர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினரின் சித்ரவதையால் படுகொலையான ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்.
செய்யாத தவறுக்காக, போலீஸாரால் காவல் நிலையத்திற்கு இழுத்து வரப்பட்டு, சித்ரவதை செய்து அடித்துக்கொல்லப்பட்ட வணிகர்கள் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணித்து ஏறக்குறைய எட்டு மாதங்கள் உருண்டோடிவிட்டன. முதல்வர் பழனிசாமியும், மாவட்ட அதிகாரிகளும் கொலையை இயற்கை மரணமாக சித்தரிக்க அனைத்து நாடகத்தினையும் நடத்திய வேளையில், நக்கீரன் மட்டும் இருவரும் போலீஸாரால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்பதனை ஆணித்தரமாக பதிவுசெய்து, அதற்கான ஆவணங்களை வெளியிட்டது.
இதேவேளையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையோ தாமாகவே முன்வந்து சூமோட்டோ வழக்காகப் பதிவுசெய்து விசாரணையைத் துவக்கியது. அதன்பின், வழக்கினைக் கையிலெடுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸ், கொலையாளிகளைக் கைது செய்து சிறையிலடைத்தது. இதிலும் அரசியல் தலையீடு வரலாமென அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்த வேளையில், இரட்டைப் படுகொலை வழக்கு சி.பி.ஐ. வசம் சென்றது. 25-09-2020 அன்று, அதாவது கொலையுண்ட நாளிலிருந்து 95வது நாளில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 105 சாட்சிகள், 38 சான்றாவணங்களுடன் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சி.பி.ஐ.
வழக்கு மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறுமென உயர் நீதிமன்றம் அறிவித்த வேளையில், நவம்பர் 11 அன்று நீதித்துறை நடுவர் வடிவேலு முன்பு ஆஜராகிய போலீஸ் கொலையாளிகள் 9 நபர்களுக்கும் சி.பி.ஐ. தயாரித்த 2027 பக்க குற்றப்பத்திரிகை தனித்தனியாக வழங்கப்பட்டது. அதன் பின் வழக்கில் ஏறுமுகம் இல்லை.
இந்நிலையில், 11-12-2020 அன்று சி.பி.ஐ. தரப்பிற்கு ஒரு கடிதம் எழுதினார் கொலையுண்ட ஜெயராஜின் மனைவி செல்வராணி. "படுகொலை வழக்கிற்காக 10-12-2020 அன்று மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகினர் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸார் 9 பேரும். இதில் முதல் குற்றவாளியாக கருதப்படும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை இரண்டு பெண்கள் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த தன்னுடைய வழக்கறிஞரின் செல்ஃபோனை வாங்கி, "36 லட்சத்தைக் கொண்டு வந்து கொடுக்கலைன்னா.. வெளியே வந்தவுடன் உன்னுடைய கதையை முடித்துவிடுவேன்'' என சப்தமாக யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த காவலர்கள் அவரிடமிருந்து செல்ஃபோனைப் பறிக்க முயற்சித்த நிலையில் அவர்களையும் மிரட்டினார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தன்னுடைய பணபலத்தையும், ஆள் பலத்தையும் வைத்து வழக்கின் சாட்சிகளைக் கலைக்கும் நோக்கில் செயல்படுகிறார் என தெரியவருகிறது. மேற்படி காட்சி அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. ஸ்ரீதரின் செயல்குறித்து ஆராய்ந்து விசாரணை நடத்தி நேர்மையாக வழக்கு நடப்பதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகிறேன்'' என்கிறது அக்கடிதம்.
கடந்த 10-02-2020 அன்று, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் மனு அளித்த ஜெயராஜ் மகள் பெர்சி, "ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டு உடற்கூறாய்வு முடிந்து 8 மாதங்கள் கடந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு உடற்கூறாய்வு முடிவு அறிக்கை தேவைப்படுகிறது. உடற்கூறாய்வியல் துறையில் அறிக்கை குறித்து கேட்டால் முறையான பதில் தர மறுக்கிறார்கள். உடற்கூறு ஆய்வு அறிக்கை பெறுவதற்கான மனுவையே வாங்க மறுக்கிறார்கள் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர். நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை'' என குறிப்பிட்டார். இந்நிலையில், பெர்சி, அவரது அம்மா செல்வராணி உள்ளிட்ட குடும்பத்தினருடன் சாட்சியங்களும் மிரட்டப்படுவதாக தகவல் வெளியான நிலையில், வழக்கை விரைந்து நடத்திட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் செல்வராணியால் அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
"கிட்டத்தட்ட எட்டுமாத காலம் ஆகிவிட்டது. டிரையல் கூட இன்னும் ஆரம்பிக்கலை. ‘ஏய்..? மூணு பொட்ட புள்ளைகதானே அங்க இருக்கு.. அதுகளுக்கு எதுக்குத் தேவையில்லாத வேலை. அவ அண்ணனுக்கும், அப்பனுக்கும் நடந்தது அவங்களுக்கு நடக்கனுமா? சொல்லி வைச்சுடுலே' என இப்படித்தான் உறவுக்காரங்க மூலமாக மிரட்டுறாங்க. இதுல சாட்சியாகவுள்ள பாதி உறவுக்காரங்க வருவாங்களா என்பதே தெரியவில்லை. ஜெயிலில் இருக்கும்போதே இப்படி மிரட்டுகிறார்கள் என்றால் வெளியில் பெயில் கிடைச்சு வந்தால் எங்களை சும்மாவிடுவாங்களா..? நித்தம் நித்தம் செத்துப் பொழைக்க வேண்டிய சூழல் எங்களுக்கு.
பெத்த அப்பாவை அவம் கண்ணுக்கு முன்ன இன்னொருத்தன் அடிப்பதை எந்த மகன் பாத்துக்கிட்டு இருப்பான். இப்பத்தான் ஒண்ணொண்ணா தெரியுது. இரண்டு பேரையும் அடிக்கையில், ‘செத்தா சாவுலே... சொத்த வித்தாவது கேசை நடத்திடுவேன்' என எஸ்.ஐ.பால கிருஷ்ணனும், ‘நீ செத்து வேலை போச்சுன்னா... ஆடு மாடாவது மேய்ச்சு நான் பொழைச்சுக்குவேன்' என எஸ்.ஐ. ரகுகணேஷூம் சொல்லிக்கிட்டே அடிச்சிருக்கானுக.. கொடூரமாக அடிச்சு சிதைச்சிருக்கிறானுக இந்த மிருகங்கள். இவனுகளை வெளியில் விடுவது எங்களைத் தூக்குல போடுறதுக்கு சமம். இன்னொன்று ‘எனக்கு கிடைத்த வேலையும், நிவாரணமும் நாங்க கேட்கலை. அரசுதான் கொடுத்தது. இதுதான் கிடைச்சுருச்சேனு நாங்க சமாதானமாகிவிடுவோம்' என்கிறார்கள். இது இரண்டுமே எங்களுக்குத் தேவையில்லாதது. இருக்கின்ற ஒத்தை வீட்டை வித்தாவது கேசை நடத்திடுவோம். எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு தேவை நீதி மட்டுமே.! தேர்தல் காலம் என்பதால வழக்கு இன்னும் தாமதமாகுமோன்னு அச்சம் இருக்கு'' என்கிறார் ஜெயராஜின் மூத்தமகள் பெர்சி.
ஜெயராஜின் மனைவி செல்வராணியோ., "உண்மையைச் சொல்லணும்னா எனக்குப் பயமாக இருக்கு. ஏற்கனவே இரண்டுபேரைப் பறிகொடுத்திட்டேன். சொந்தக்காரங்க அத்தனை பேரும் சொல்றதைப் பார்க்கையில் எனக்குப் பயமாக இருக்கு. இங்கேயிருந்து வேலைக்குப் போற பெர்சி திரும்ப வீடுவந்து சேரும்வரை எனக்குப் பயமாக இருக்கு. ஒவ்வொரு நாளும் எனக்குப் பயம் அதிகமாக இருக்கு. எனக்கு மூனும் பொட்டப்புள்ளைக. ஆளுக்கு ஒரு திசையில் இருக்காக.. ஏதாவது நடந்திடுமோன்னு நித்தம் பயமாக இருக்கு. வழக்கை விரைந்து நடத்தி அவங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திட்டால் இந்தப் பயம் இருக்காது'' என்கிறார் அவர்.
இது இப்படியிருக்க, "முதலில் மூச்சுத் திணறலால் இருவரும் இறந்தனர் என அரசு அறிவித்தது. பின் குட்டு வெளிப்பட்டவுடன் அவசரம் காட்டிய அரசு, குற்றவாளிகளைக் கைது செய்தது. அதன் பின் சுணக்கம் காட்டியது. விரைந்து எடுத்த நடவடிக்கையால் தொடக்கத்தில் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்தாலும், சீக்கிரமே வழக்கினை முடித்தால் அரசுக்கு அவப்பெயர் வந்துவிடும்" என்கின்ற காரணத்தாலேயே வழக்கினை தாமதப்படுத்தும் எண்ணத்தில் அரசு செயல்படுகின்றது'' என்கிற பேச்சும் ஜெயராஜ் பென்னிக்ஸ் உறவினர்கள் மத்தியில் உண்டு.
இவர்களின் வழக்கறிஞரான ராஜீவ் ரூபஸோ, "‘உன்னால ஒன்றும் புடுங்கமுடியாதுடா' என ஏற்கனவே கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் நடந்துகொண்ட விதத்தால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாடே அறியும். இந்தியாவை அதிர வைத்த இந்தக் காவல் படுகொலை விசாரணையைத் தாமதப்படுத்துவது மறுக்கப்பட்ட நீதிக்கே சமமானது. இது மாதிரியான வழக்குகளை விரைந்து முடித்திடல் வேண்டுமென 1994 நஈஈ (3) 569 கர்தார் சிங் வெர்சஸ் பஞ்சாப் மாநில போலீசார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு வழக்கை விரைந்து நடத்திட ஆணை பிறப்பித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்'' என்கிறார் அவர்.