பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 9 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை (9 சால் 9 சாவால் - 9 ஆண்டுகள் 9 கேள்விகள்) எழுப்பியுள்ளது.
நாட்டில் பணவீக்கமும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துக்கொண்டே செல்வது ஏன்? பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரராவதும் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவது ஏன்? என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து செல்கையில் அரசு நிறுவனங்களை தன் நண்பர்களுக்கு பிரதமர் மோடி விற்பது ஏன் என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜக அரசு வாக்குறுதி அளித்தபடி இந்திய விவசாயிகளின் வருமானம் 9 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகாதது ஏன்? என்றும் காங்கிரஸ் கேட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை பாஜக அளிக்காதது ஏன்? மக்கள் கடின உழைப்பால் ஈட்டிய சேமிப்பை எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி., போன்றவற்றில் மத்திய அரசு முதலீடு செய்தது ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது குறித்து பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்காதது ஏன் என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் சீனாவுக்கு மோடி நற்சான்று அளித்த பிறகும் இந்திய மண்ணை அந்நாடு தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளது ஏன்? 18 முறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் இந்திய பகுதியை சீனா திருப்பி ஒப்படைக்க மறுப்பது ஏன்? தேர்தல் ஆதாயத்துக்காக வேண்டுமென்றே பாஜக வெறுப்பு அரசியலை கடைபிடிப்பது ஏன்? திட்டமிட்டமுறையில் சமூக நீதியின் அடிப்படைகளை பாஜக ஆளும் மாநில அரசுகள் அழிப்பது ஏன்? பெண்கள், தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிரான கொடுமை நடக்கும் போது சாதி ரீதியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் அலட்சியப்படுத்துவது ஏன்? என்றும் காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அரசியல் சட்ட விழுமியங்களையும் ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அரசு பலவீனப்படுத்துவது ஏன்? எதிர்க்கட்சிகள் மற்றும் அக்கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக பழிவாங்கும் அரசியலை பாஜக கடைபிடிப்பது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பணபலத்தை பயன்படுத்தி சீர்குலைப்பது ஏன்? கொரோனாவால் 40 லட்சம் மக்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்களது குடும்பத்துக்கு மோடி அரசு இழப்பீடு தர மறுப்பது ஏன்? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.