அ.ம.மு.க.வில் இருந்து பலரும் அ.தி.மு.க.வில் இணைந்துகொண்டிருக்கும் நிலையில்... "அக்கட்சியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வந்தால் மட்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்' என்று கறாராக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. "பல்வேறு கட்சிகளுக்கு பழனியப்பன் தூது அனுப்பிக்கொண்டிருப்பதால்தான், அவரை எடப்பாடி வெறுக்கிறார்' என்கிறார்கள். அதேநேரத்தில் எதிர் தரப்பினரோ, "அனுப்பிய தூதுவர்களை எல்லாம் பழனியப்பன் துரத்திவிட்டதால்தான் அவர் மீது எடப்பாடி வெறுப்பை காட்டுகிறார்' என்கிறார்கள்.
அ.ம.மு.க.வுக்கு சென்றுவிட்ட பழனியப்பன், ஆர்.ஆர்.முருகன் ஆகிய இருவரையும் ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக எடப்பாடி முயற்சி எடுத்துள்ளார். பாண்டிச்சேரியில் 18 எம்.எல்.ஏக்கள் இருந்தபோது பாப்பிரெட்டிப்பட்டி வரலட்சுமி கிழங்கு மில் உரிமையாளர் அன்பழகன் மூலமாக எடப்பாடி தூது அனுப்பியிருக்கிறார். பல மில்களின் ஓனரான இந்த அன்பழகன் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்துவருவதாகச் சொல்கிறார்கள்.
பழனியப்பன், அண்ணா தொழிற்சங்க சிறப்புத் தலைவராக இருந்தபோது வரலட்சுமி கிழங்கு மில்லில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு போதிய ஊதிய உயர்வு கொடுக்காமல் இருந்திருக்கிறார் அன்பழகன். இந்த விவகாரம் பழனியப்பனிடம் சென்றபோது, அவர் இது தொடர்பாக அன்பழகனை அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லை என்றாகிவிட்டது. இப்படி முன்விரோதம் இருந்த நிலையில்தான், எடப்பாடி சொன்னதற்காக தூது சென்றிருக்கிறார் அன்பழகன். பகைமை மறந்து பாண்டியில் கைகுலுக்கிய அன்பழகன், ""நான் இப்போது கட்சி விசயமாக பேச வந்திருக்கிறேன். நீங்களும் முருகனும் அ.தி.மு.க.வுக்கு வந்தால்போதும். நீங்கள் கேட்பது நிச்சயம் கிடைக்கும்''’என்று சொல்ல, அந்த டீலிங்கை மறுத்துள்ளார் பழனியப்பன். அடுத்தகட்டமாக சேலம் மேற்கு எம்.எல்.ஏ.வான வெங்கடாச்சலம் மூலமாக தூது அனுப்பியுள்ளார் எடப்பாடி. அப்போதும் பழனியப்பன் செவி சாய்க்காத நிலையில்தான், பழனியப்பனை மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார் எடப்பாடி.
அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது நிறுவனங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாமக்கல் மோகனூர் ஆசிரியர் குடியிருப்பில் வசித்துவந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு காண்ட்ராக்டருமான சுப்பிரமணியம் என்பவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நடந்த சில நாட்களில் சுப்பிரமணியன் தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்தார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியபோது, விசாரணையில் பழனியப்பன் பெயரையும் இணைத்து மிரட்டியுள்ளார். அதிலும் பழனியப்பன் பணிந்து வராததால்தான், அவர் மீதான ஆத்திரத்தில், பல்வேறு கட்சிகளுக்கு தூது அனுப்பும் அவர் அ.தி.மு.க.வுக்கு வந்தால் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று கறாராக இருக்கிறார் எடப்பாடி'' என்கிறார்கள்.
இதுதொடர்பாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பழனியப்பனிடம் நாம் பேசிய போது,
"நான் எந்தக் கட்சிக்கும் தூது அனுப்பவில்லை. முதல்வர்தான் எனக்கு தூது அனுப்பினார். அதற்கான விசயத்தை நான் வெளிப்படையாக சொல்கிறேன். அன்பழகன் மட்டுமல்ல, இன்னும் யார், யார் மூலமாக எனக்கு தூது அனுப்பினார் என்றும் என்னால் சொல்ல முடியும். அதேபோல அவரால் சொல்ல முடியுமா? நான் அவருக்குத் தேவை. அதனால், இழுத்துப் பார்த்தார் முடியவில்லை, அதனால் ஏதேதோ அவிழ்த்துவிடுகிறார்''’என்கிறார்.