அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவிரி மருத்துவமனைக்கு நேற்று இரவு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையில் பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு கத்துக்குட்டி ஒன்று கத்திக்கொண்டிருக்கிற போது அதை அடக்க கொங்கு நாடே திரண்டு வந்துள்ளது. திமுக அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபோதும் அவரை மனிதநேயமற்று நடத்துகிறார்கள். அவரது சகோதரருக்கு மீண்டும் சம்மன் அனுப்பி சர்வாதிகார போக்கோடு நடந்து கொண்டுள்ளது மத்திய பாஜக அரசு. பாஜக அரசின் கைக்கூலிகளாக உள்ள அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மத்திய அரசு தமிழகத்தின் மீது எந்த காலத்திலெல்லாம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதோ, பாசிச சட்டங்களை எப்போதெல்லாம் எங்கள் மீது திணித்துள்ளதோ அதற்கெதிராக களம் கண்டு திமிறி எழுந்த மண் தான் தமிழ்நாடு. மிசா எனும் கொடும் சிறையை சந்தித்த தலைவர்களை கொண்ட இயக்கம் திமுக. பொடா, தடா உள்ளிட்ட சட்டங்களை சந்தித்த தலைவர்கள் வைகோ உள்ளிட்டோர்.
வருமானவரித்துறை, சிபிஐ போன்றவை உங்கள் கைகளில் உள்ள தைரியத்தில், மாநில உரிமைகளுக்காக சுயமரியாதையோடு உங்களை எதிர்த்து போராடும் தலைவர்களை அடக்க, ஒடுக்க நினைக்கிறீர்கள். தமிழ்நாடு வரும் 2024 தேர்தலில் உங்களை தூக்கிப் போட்டு மிதிக்கப்போகிறது. அமித்ஷா வந்தாராம்.. அண்ணாமலை சொன்னாராம்.. மறுநாள் செந்தில் பாலாஜியை கைது செய்தார்களாம். அண்ணாமலை ஐபிஎஸ் பணியையே முழுமையாக செய்யவில்லை. நீங்கள் வாய்த்துடுக்குடன் அதிகம் பேசுகிறீர்கள். திமுகவிற்கென்று ஒரு பொதுப்புத்தி இருக்கிறது. முதல்வரின் கண்ணசைவிற்கு கட்டுப்பட்டு திமுகவினர் அமைதியாக நடந்துகொள்கிறார்கள். இதுவே பழைய திமுகவாக இருந்தால் அண்ணாமலை இப்படி பேச முடியுமா?” என்றார்.