மராட்டிய அரசு சார்பில் மராட்டிய பூஷன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நவிமும்பையில் உள்ள மைதானத்தில் நடந்த இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மராட்டிய பூஷன் விருது ஆன்மீகத் தலைவரும் சமூக ஆர்வலருமான அப்பாசாகிப் தர்மாதிகாரிக்கு அமித்ஷா வழங்கினார்.
காலை 11.30 மணியளவில் துவங்கிய இந்த விழாவிற்கு காலை முதலே மக்கள் கூடத் துவங்கினர். 306 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் மக்களுக்கு கொட்டகைகள் ஏதும் ஏற்பாடு செய்யாமல் திறந்த வெளியில் இந்நிகழ்வு நடந்தது. வெயிலின் தாக்கத்தால் பலர் நீர்ச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டனர். அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் இருந்த மருத்துவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பல்வெல்லில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 24 பேருக்கு தொடர் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.