Skip to main content

“இன்னும் பத்தே நாள்; நான் யாரையும் விடப்போவது இல்லை” - அண்ணாமலை திட்டவட்டம்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

“10 more days; I am not going to let anyone down”- Annamalai

 

சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல. அந்தக் காணொளியைக் காணும் மக்களுக்கு இது பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து மற்றும் கட்சியின் எண்ண ஓட்டம் இதுதான் என்கிற தவறான பிம்பத்தை மக்களிடம் எடுத்துச் சென்றுவிடுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

 

அதன் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் பாஜகவில் வகித்துவரும் பொறுப்புகளிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

 

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் தேநீர் கடை ஒன்றை திறந்து வைத்து விட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “தவறு யார் செய்திருந்தாலும் நான் விடப்போவது கிடையாது. விசாரணைக் குழுவில் நாளை மாலைக்குள் சிவா குறித்த அறிக்கையை அனுப்பச் சொல்லியுள்ளேன். இரு பக்கத்தின் தரப்பும் கேட்டு முடிவெடுக்கப்படும். தனிப்பட்ட உரையாடல் என்று சொன்னாலும் கூட யாரும் தப்ப முடியாது. பொதுவெளியில் பேசியிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்போம். 

 

இதில் விசாரணை ஏன் தேவை என்றால் அவர்களது கருத்துகளைச் சொல்ல வாய்ப்புகள் உள்ளது. அதனால் விசாரணை என்பது தேவைப்படுகிறது. இன்னும் 10 நாள் பொறுத்திருங்கள். கட்சியின் ஒழுக்க விதிகளை யாரெல்லாம் தாண்டுகிறார்களோ, அவர்கள் மேலெல்லாம் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும். நான் யாரையும் விடப்போவது இல்லை. அப்படி இல்லை என்றால் இந்த கட்சி அடுத்த கட்டத்திற்கு போகாது. இந்த கட்சி எல்லோருக்குமானது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்