பேரிடர் நேரத்தில் நிவாரண உதவி வழங்கிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசிற்கும் இமாச்சலப் பிரதேச முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
சில நாட்களாகவே வரலாறு காணாத பலத்த மழை காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு என பேரிடர்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் சுமார் 300க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக நிகழ்ந்த நிலச்சரிவு, பலத்த மழை, வெள்ளம் ஆகிய காரணங்களால் ஏராளமான பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொதுச் சொத்துக்களும் தனியார் சொத்துக்களும் அழிந்துள்ளன.
இடைவிடாத மழை, மேக வெடிப்பு போன்றவற்றால் மாநிலம் முழுவதும் பேரழிவை சந்தித்துள்ளது, மறுபுறம் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் நாசமாகிவிட்டதாக தெரிவித்துள்ள அம்மாநில அரசு, மழை வெள்ள பாதிப்புகளால் பயிர்களும், விவசாய நிலங்களும் அழிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகளில் ராணுவம், விமானப்படை, தேசிய மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல் படையினர், தன்னார்வலர் தொண்டு நிறுவனத்தினர் என கூட்டு முயற்சியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இரவு பகலாக மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வரலாறு காணாத பேரழிவு காரணமாக இமாச்சலப் பிரதேசத்தை தேசிய பேரழிவு ஏற்பட்டுள்ள மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்தது.
தொடர்ந்து இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு கடந்த 22 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதி உதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங்கை போனில் தொடர்பு கொண்டு பாதிப்பு விவரங்களை கேட்டறிந்த முதல்வர், 'இமாச்சலத்தில் இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. மிகவும் நெருக்கடியான நிலையில் மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலத்திற்கு உதவ தமிழ்நாடு அரசும், மக்களும் எப்பொழுதும் தயார் நிலையில் உள்ளோம். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்'' என தெரிவித்ததோடு, நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாயை தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இமாச்சல பிரதேசத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக 10 கோடி ரூபாய் வழங்கியதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நன்றி தெரிவித்துள்ளார். உங்கள் ஆதரவு பேரிடர் காலங்களில் ஒற்றுமை மற்றும் பரிவுணர்வைப் பிரதிபலிக்கிறது. தேவையான நிவாரணங்களை ஒன்றிணைந்து வழங்குவோம்' எனத் தெரிவித்துள்ளார்.