டெல்லி உத்தம் நகர் சேவக் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், கமலேஷ் தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘கடந்த மாதம் 30ஆம் தேதி அன்று, தான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளை போனது’ என்று தெரிவித்திருந்தார்.
அவர் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து சோதனை செய்தனர். அப்போது அந்த சிசிடிவி பதிவில், புர்கா அணிந்த ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியது தெரியவந்தது.
மேலும், அந்த பதிவில் புர்கா அணிந்த பெண் அப்பகுதியின் பொதுக்கழிவறை ஒன்றில் இருந்து வெளியே வருவதை கண்டுள்ளனர். அதே வேளையில், கமலேஷின் மூத்த மகளான ஸ்வேதா (31) என்பவர் அந்த பொதுக்கழிவறையில் நுழைந்ததையும், அவர் வெளியே வராததையும் உறுதி செய்தன. எனவே, கழிவறைக்குள் நுழைந்த ஸ்வேதா புர்கா அணிந்து வெளியே வந்து தனது சொந்த வீட்டில் திருடியுள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கமலேஷின் மூத்த மகளான ஸ்வேதாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தான் திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையில், தன்னை விட தனது தங்கை மீது தாய் கமலேஷ் அதிகம் பாசம் வைத்திருந்ததால் ஸ்வேதா கோபமாக இருந்துள்ளார். மேலும், தனது சகோதரியின் திருமணத்திற்காக அதிகளவில் நகைகள், ரொக்க பணம் ஆகியவற்றை கமலேஷ் சேகரித்து வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஸ்வேதா, தனது தங்கையை பழிவாங்குவதற்காக, தங்கைக்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருட திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, சம்பவத்தன்று கமலேஷ் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து புர்கா அணிந்து வந்து பொருட்களை திருடிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. சகோதரி மீது தாய் அதிகளவில் பாசம் வைத்திருந்ததால் தனது சொந்த வீட்டில் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.