பள்ளிகளில் யோகாவைக் கட்டாயப்படுத்தக் கோரிய மேல்முறையீடு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
பள்ளிக்கூடங்களில் யோகா பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும் என்ற வழக்கின் மேல்முறையீட்டினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை யோகாவைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தொடுக்கப்பட்டது. இதனை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் எம்.பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிராணயாம பயிற்சி மற்றும் அனைத்து ஆசனங்களைப் பயிற்சி செய்வதற்கும் பிரத்யேகமான பாடத்திட்டம், வகுப்புகள் மற்றும் பாடப்புத்தகங்களை உருவாக்கவேண்டும். மாணவர்களின் நலன்கருதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை யோகாவைக் கட்டாயப்படுத்துவதற்கான முயற்சியை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கல்வி அடிப்படை உரிமைகளின் கீழ் உள்ளது. யோகாவை அடிப்படை உரிமையாக எங்கும் சொல்லவில்லையே. பள்ளிகளில் என்ன பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதை நாம் எப்படி தீர்மானிக்க முடியும்? பள்ளிகளின் பாடத்திட்டங்கள் குறித்த மாறுதல்களை ஏற்படுத்த நமக்கு என்ன உரிமை உள்ளது? அரசுதான் அதற்கான நிபுணர் குழுக்களை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.
மேலும், இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- ச.ப.மதிவாணன்