புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்றுப் பேராசிரியர் கா. காளிதாஸ், பேராசிரியர் சாலை கலையரசன் ஆகியோர் கொண்ட வரலாற்று ஆய்வுக்குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் சித்துப்பட்டியில் வரலாற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊர்ப் பூசாரி தம்பிராஜ், கந்தசாமி பண்டாரம் இருவரும் கொடுத்த தகவலின்படி இவ்வூரில், இரண்டாம்நந்திவர்மப் பல்லவன் காலத்து (கி.பி 730 - 760) கி.பி. 7ஆம் நூற்றாண்டு சிவன் கோவிலைக் கண்டறிந்தனர்.
இது பற்றிக் காளிதாஸ் கூறியதாவது, “மலைச்சுனையை ஒட்டிய பல்லவர் காலத்துச் சிவன் கோயில் இடிபாட்டுடன் தரைமட்டமாகி லிங்கம் பூமியில் புதையுண்ட நிலையில் கிடக்கிறது. எதிரே ஏழடி நீளம் இரண்டரை அடி அகலம் கொண்ட சூலம் பொறிக்கப்பட்ட பலகைக்கல்லில் நந்தி, மழு (கோடரி) புடைப்புச் சிற்பமாக உள்ளது. இக்கோயிலில் நாகார்ஜுனர் (மகாயான புத்தர்) சிலை அமர்ந்த நிலையில் அபயகரத்துடன் உள்ளது. குளத்தின் மேல் கரையில் பல்லவர் கால அய்யனார் சிற்பமும், மாந்தன், மாந்தி தவ்வை சிற்பங்களும் உள்ளன. முதலாம் மாறவர்மன் ராஜசிம்மன் (கி.பி 730-760) என்பவன் கொடும்பாளூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லவர்களோடு போரிட்ட வரலாற்றுச் செய்தி உள்ளது.
சித்துப்பட்டியில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் ஆண்டதற்கான சான்றுகள் புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுக்களில் உள்ளன. சைவம், பௌத்தம் ஆகிய சமயங்களைப் பல்லவர்கள் ஆதரித்துப் போற்றியுள்ள சான்றாதாரங்களை இங்கு நேரில் காணலாம். இந்த வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க அரசாங்கம் மற்றும் தொல்லியல் துறை முன்வர வேண்டும். இவ்வூரை அகழாய்வு செய்தால் மேலும் பல தொல்லியல் தடயங்கள் கிடைக்கலாம்” என்றார்.