இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர். மேலும் டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தனர். தொடர்ந்து நேற்று மாலை ஹரித்வாரில் குவிந்த அவர்களை விவசாய சங்கத்தினரும் மக்களும் சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஹஸ்ரா மோர் முதல் ரவீந்திர சதன் வரை பேரணி நடத்தினார். இந்த பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, "எங்கள் குழுவினர் மல்யுத்த வீரர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளனர். நாங்கள் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம், அதனால் தான் இன்று இந்த பேரணியை நடத்தியுள்ளோம். நாளையும் இந்த பேரணி நடைபெறும். மல்யுத்த வீரர்கள் நாட்டின் பெருமை. இந்த போராட்டத்தில் உங்களுடன் நாங்கள் உள்ளோம்" என்றார்.