
ராஜஸ்தான் மாநிலத்திற்கு நேற்று (05.12.2021) பயணம் மேற்கொண்ட அமித் ஷா, அங்கு மாநில பாஜக தலைவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், ராஜஸ்தான் அரசைப் பாஜக கவிழ்க்காது என தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக பாஜக தலைவர்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது, “தங்கள் அரசாங்கம் கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்திலயே அவர்கள் (காங்கிரஸ்) எப்போதும் இருக்கிறார்கள். ஆட்சியைக் கவிழ்க்கப்போவது யார்? யாருமே இல்லை. உங்கள் அரசை (காங்கிரஸ் அரசை) பாஜக ஒருபோதும் கவிழ்க்காது. பாஜக மக்களிடம் சென்று 2023இல் வலுவான வெற்றியுடன் ஆட்சிக்கு வரும்.
உங்கள் அரசு சிறப்பாகச் செயல்படுவதாக நீங்கள் நினைத்தால், உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வரப்போகிறது. ராஜஸ்தானிலும் தேர்தலை நடத்துங்கள். மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 2023 வரையிலான உங்கள் பதவிக் காலத்தை நிறைவு செய்ய வேண்டுமெனவும், மக்களுக்காகப் பணியாற்ற வேண்டுமெனவும் நாங்கள் விரும்புகிறோம்.
காங்கிரஸ் வறுமைக்குப் பதிலாக ஏழைகளை அகற்ற உழைத்தது. ஏழைகளின் முன்னேற்றத்திற்காக உழைத்தது மோடி அரசுதான். கிராமப்புற வீடுகளுக்கு மின்சாரம், எரிவாயு இணைப்புகள், கழிப்பறைகள் ஆகியவற்றை வழங்கியது. சிமெண்ட் வீடுகளையும் அளித்தது.” இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.