செயற்கைக்கோள்களை தடுத்து அழிக்கும் ஏ-சாட் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி நாட்டு மக்கள் முன் அறிவித்தார். இதற்காக DRDO அமைப்புக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் விஞ்ஞானிகளை பாராட்டிய ராகுல், பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தற்போது கருத்து கூறியுள்ள மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "காலாவதியான இந்த அரசாங்கம் இப்படி ஒரு மிஷனை நடத்த வேண்டிய எந்த அவசரமும் இல்லை. அதை பிரதமர் மக்கள் முன் அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இது மூழ்கிக் கொண்டிருக்கும் பாஜக எனும் கப்பலுக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் அவசரமாகவே தெரிகிறது. தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் தெரிவிக்க உள்ளோம். தேர்தல் நேரத்தில் தனது கட்சிக்கு ஆதாயம் தேட பிரதமர் மோடி இதனை அறிவித்திருக்கிறார். இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும். அதே நேரத்தில் இஸ்ரோ மற்றும் டிஆர்டோ விஞ்ஞானிகளை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இத்தகைய ஆராய்ச்சிகள் சாதாரணமாக நடைபெறும் ஒன்றுதான். ஆனால், இப்போது இந்தத் தருணத்தில் மோடி அதனை அறிவித்து தனக்கும் தனது அரசுக்கும் மகுடம் சூட்டிக் கொள்ள முயல்வது தவறானது. இன்று உண்மையான பாராட்டுக்குரியவர்கள் விஞ்ஞானிகளே" எனப் கூறியுள்ளார்.