பா.ஜ.க.வில் இணைந்தால் வழக்குகளை ரத்து செய்வதாக அக்கட்சித் தரப்பில் பேரம் பேசப்படுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.
முறைகேடு வழக்கில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், ட்விட்டரில் பதிவு ஒன்றை மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ளார். அதில், ஆம் ஆத்மி கட்சியை உடைத்துவிட்டு, பா.ஜ.க.வில் சேருமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு செய்தால் வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம் என பேரம் பேசப்பட்டதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
தாம் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ள மணீஷ் சிசோடியா தனது தலையை வெட்டி கொள்வேனே தவிர சதிகாரர்கள் முன் தலைவணங்க மாட்டேன் என ஆவேசமாகத் தெரிவித்திருக்கிறார். நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள் என்று பா.ஜ.க.வுக்கு மணீஷ் சிசோடியா சவால் விடுத்துள்ளார்.