Skip to main content

வீட்டில் தனியாக இருந்த பெண் அதிகாரி படுகொலை; சிசிடிவி காட்சியில் சிக்கிய கொலையாளி

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

A woman officer lost her life who was alone at home in bangalore

 

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதிமா (37). இவர் கர்நாடகா ஆட்சி பணி அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்தார். அதில் பெங்களூரில் உள்ள கனிமவளம் மற்றும் நில அறிவியல் துணை இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை பிரிந்து 5 ஆண்டுகளாக பெங்களூரில் தனியாக வசித்து வந்தார். பிரதிமாவின் சகோதரர் பிரதீஷ் பெங்களூர் மாநகராட்சி காண்டிராக்டராக இருந்து வருகிறார். பிரதீஷ் தன்னுடைய சகோதரியான பிரதிமா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

 

இந்த நிலையில், நேற்று முன் தினம் (04-11-23) இரவில் வழக்கம் போல் சகோதரி பிரதிமாவுக்கு பிரதீஷ் செல்போனில் அழைத்து பேச முயன்றார். 3 முறைக்கு மேல் பிரதிமாவின் செல்போனுக்கு அழைத்தும் அவர் எடுத்து பேசவில்லை. இதையடுத்து, பிரதீஷ் அடுத்த நாள் காலையிலும் தனது சகோதரியை தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த பிரதீஷ், பிரதிமாவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஒரு அறையில் பிரதிமா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த பிரதீஷ் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். 

 

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பிரதிமா வசித்து  வந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர். அந்த காட்சிகளில் சந்தேகத்தில் இடமான மர்ம ஒருவர் வருவதை பார்த்த காவல்துறையினர்  அவரை பற்றி தகவலை சேகரித்தனர். 

 

மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அந்த நபரை தேடிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் பெயர் கிரண் என்பதும் அவர் சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறையின் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றிய தடயங்களை வைத்து பெண் அதிகாரி பிரதிமாவை கொலை செய்தது கிரண் தான் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

 

இதையடுத்து, கிரணிடம் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கிரண் மீது பல புகார் இருந்ததால் அவரை பிரதிமா பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கிரண், பிரதிமாவை கொலை செய்ய திட்டமிட்டு நோட்டமிட்டுள்ளார். இதையடுத்து, பிரதிமா நேற்று முன் தினம் இரவு தனது பணியை முடித்து வீட்டிற்கு செல்வதை பார்த்த கிரண், பிரதிமாவின் வீட்டிற்கு சென்று கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. பெண் அதிகாரியை அவரது வீட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்