இந்தியாவில் கரோனாவால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா இரண்டாவது அலையில் மட்டும் 719 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கூறியுள்ளது. இதற்கிடையே பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா சிகிச்சையில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், சுகாதாரப் பணியாளர்களைத் தாக்குபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய அரசு பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.அதில், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு கூறியுள்ளது. மேலும் திருத்தப்பட்ட தொற்றுநோய் நோய் சட்டத்தை அமல்படுத்துவதோடு, சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கு தேவையான மற்றும் உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் மத்திய சுகாதாரத்துறை அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.