காஷ்மீருடன் வெளியுலகத் தொடர்பை துண்டித்து ஐந்து மாதங்கள் முற்றாக முடிந்துவிட்டன. அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்கள் மிரட்டப்பட்டு, வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வெளியுலகின் பார்வைக்காக சில நேரம் மட்டுமே மக்கள் வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே சுற்றுலா பகுதிகளில் நடமாட முடிகிறது. அதாவது வழக்கத்திற்கு மாறான காட்சிகளை காட்டி, இதுதான் காஷ்மீரின் வழக்கமான நடவடிக்கைகள் என்று நிரூபிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
லட்சக்கணக்கான ராணுவத்தினரின் உதவியோடு அச்சத்தின் பிடியில் மக்களை வீட்டுச்சிறைகளில் அடைத்திருப்பதற்கு பதிலாக அந்த மாநிலத்தையே சிறையாக அறிவித்துவிட்டால் என்ன என்று காஷ்மீர் மாநில சிபிஎம் செயலாளர் தாரிகாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஹோட்டல்களையும், விருந்தினர் மாளிகைகளையும், அரசுக் கட்டிடங்களையும் சிறையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பதிலாக காஷ்மீர் முழுவதையுமே சிறைச்சாலையாக அறிவித்து விடலாம் என்று கிண்டலாக கூறினார்.