இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கரோனா நிலை குறித்து, பிரதமர் நேற்று (14.04.2021) மாநில/யூனியன் பிரதேச ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், இந்தியாவில் முதன்முறையாக நேற்று ஒரேநாளில் 2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தில், முர்ஷிதாபாத் மாவட்டம், சம்சர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரெசால் ஹக் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேற்கு வங்கத்தில் இன்னும் நான்கு கட்ட தேர்தல் மீதமிருக்கும் நிலையில், அங்கு கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தேர்தல் நேரத்தில் கரோனா விதிமுறைகளைக் கடைபிடிப்பது குறித்து ஆலோசிக்க, தேர்தல் ஆணையம் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தநிலையில், காங்கிரஸ் வேட்பாளர் கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
தமிழகத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.