பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என அனைத்து விருதுகளையும் சேர்த்து மொத்தம் 112 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களில் முதல் கட்டமாக 56 பேருக்கு ஜனாதிபதி மாளிகையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த விருதுகளை வழங்கி கவுரவித்தார். அந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர். பிரபுதேவா, சங்கர் மகாதேவன், மலையாள நடிகர் மோகன்லால், தமிழகத்தை சேர்ந்த பங்காரு அடிகளார் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் மற்ற 56 பேருக்கு இன்று (16/3/19) பத்ம விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டன. மதுரையைச் சேர்ந்த சமூக சேவை செயற்பாட்டாளர் சின்னப்பிள்ளை பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றார். மேலும் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ விருதை பெற்றனர்.
அதேபோல, விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. விண்வெளி ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ததாக நம்பிராஜன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டது என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்பளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.