காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தேர்தலில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, வரும் ஜூன் 27- ஆம் தேதி அன்று யஷ்வந்த் சின்ஹா தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் என்று சரத் பவார் அறிவித்துள்ளார்.
யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?- விரிவாகப் பார்ப்போம்!
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவருக்கு வயது 85. ஐ.ஏ.எஸ். அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நிதித்துறை அமைச்சராகவும், பிரதமர் சந்திர சேகர் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பா.ஜ.க.வில் இருந்து இவர், கடந்த 2018- ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, 2021- ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவியை வழங்கியிருந்தது அக்கட்சி. இவர் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர்.
பெரிய தேசிய நோக்கத்திற்காக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதாகத் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் யஷ்வந்த் சின்ஹா கூறியிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தற்போது களமிறக்கப்பட்டுள்ளார்.