1990களில் நிகழ்ந்த மாரடைப்பு மரணங்களை விட தற்போது 13% அதிகரித்துள்ளதாகவும், இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குறித்த தகவலையும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஐசிஎம்ஆர் வழங்கியுள்ள ஆய்வறிக்கைகளின்படி இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் 28.1% அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 1990களில் நிகழ்ந்த மொத்த உயிரிழப்புகளில் மாரடைப்புகளால் நிகழ்ந்த மரணங்கள் 15.2% ஆக இருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டில் 28.1% ஆக அதிகரித்துள்ளதாக பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார்.
இதில் புகையிலை உபயோகிப்பவர்கள் 32.8% பேரும், பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளாமை காரணமாக 98.4% பேரும், உடற்பயிற்சியின்மை காரணமாக 41% பேரும், மது பயன்பாட்டின் காரணமாக 15.9% பேரும் மாரடைப்பால் மரணமடைவதாக கூறியுள்ளார். இந்தியாவில் 30 வயதுகளில் இருந்து 60 வயதுகளில் உள்ள நபர்கள் மாரடைப்பால் மரணமடைவது அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.