கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 136 இடங்களிலும், பாஜக 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னிலையில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்கள் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெங்களூருவுக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்கு பெங்களூரில் ஹில்டன் ரிசார்ட் புக் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரிசார்ட்டிற்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அழைத்து வருவதற்காக 12 ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று பிற்பகலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெங்களூரு நகருக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முழுவதும் அவர்கள் அனைவரும் அங்கு தான் தங்க வைக்கப்பட இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நாளை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவா அல்லது டி.கே.சிவகுமாரா என்ற முடிவினை எடுக்க இருக்கிறார்கள். வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை வேறு யாரும் தொடர்புகொள்ளக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைமை மேற்கொண்டுள்ளது.